Sunday 3 August 2008

பிறப்பு மற்றும் இறப்பு பதிவு முறை பற்றி தெரிந்து கொள்ளுங்கள்

தமிழக அரசின் பாராட்டுக்குரிய நடவடிக்கைகளில் ஒன்று அதி வேகமான கணினிமயமாக்குதல் திட்டமாகும். இதன் பயனை சாதாரண மக்கள் எளிதில் அடையும் விதத்தில் அரசு இணைய தளம் மூலமாக அமைத்து கொடுத்து வருகிறது. அவற்றில் ஒன்று தான் பிறப்பு/இறப்பு பதிவு முறை தொடர்பான இணைய தளம். இது பற்றிய சில விவரங்கள் வருமாறு:-

இணைய தளத்தின் முகவரி : http://www.tnhealth.org/dphbd.htm. பிறப்பு/இறப்பு பதிவு முறை பற்றிய சில முக்கிய விவரங்கள் இங்கு தரப்பட்டுள்ளது. அவையாவன வருமாறு:-

  1. மத்திய அரசின் 1969-வது ஆண்டின் 18-வது சட்டமான பிறப்பு மற்றும் இறப்பு பதிவு சட்டம், 1969 ஒவ்வொரு பிறப்பும், இறப்பும் பதிவு செய்யப்படவேண்டும் என அறிவுறுத்துகிறது.
  2. தமிழ் நாடு பிறப்பு மற்றும் இறப்பு பதிவு விதிகளின் (2000) படியே இந்த பதிவு நடைபெறுகிறது.
  3. இவ்விதிகளின் படி பிறப்பு மற்றும் இறப்பு பதிவு செய்யப்பட பொறுப்பு அளிக்கப்பட்ட அதிகாரிகள் வருமாறு:- கிராம பஞ்சாயத்து: கிராம நிர்வாக அதிகாரிகள், நகர பஞ்சாயத்து: சுகாதார ஆய்வாளர்கள்/மேல் நிலை அதிகாரிகள், மாநகரம்/நகராட்சி பரப்பு: மண்டல சுகாதார ஆய்வாளர்கள்/மேல் நிலை அதிகாரிகள், மற்றும் தோட்டம்: தோட்டத்தின் மேலாளர்.
  4. பிறப்பு அல்லது இறப்பு பற்றி தகவல் அறிவிக்க சட்டம் அளித்துள்ள கால அவகாசம் இருபத்தொன்று நாட்கள் ஆகும். இதற்குள் பதிவு செய்யப்படும் பிறப்பு மற்றும் இறப்பு சான்றிதழ் இலவசமாக வழங்கப்படுகிறது. பிறப்பு அல்லது இறப்பு நடைபெற்ற இருபத்தொன்று நாட்களுக்கு பின், ஆனால் முப்பது நாட்களுக்குள் பதிவு செய்யப்படுமானால் இரண்டு ரூபாய் தாமதக் கட்டணம் வசூலிக்கப்படும். இதற்க்கு மேல், ஆனால் ஓராண்டுக்குள் தெரிவிக்கப்படும் பிறப்பு அல்லது இறப்பு பதிவு செய்யப்பட அங்கீகாரம் பெற்ற அதிகாரியின் எழுத்து ஆணையுடன் ஐந்து ரூபாய் அபராதமும் கட்டப்பட வேண்டும். ஒரு வருடத்திற்கு பிறகு பிறப்பு அல்லது இறப்பு பதிவுசெய்யப்பட வேண்டுமானால் முதல் வகுப்பு மேஜிச்டரட்டின் உத்தரவு கட்டாயம் தேவை. தவிர தாமதத்துக்கான அபராதமாக பத்து ரூபாயும் வசூலிக்கப்படும்.
  5. பிறப்பு மற்றும் இறப்பு நடைபெறும் இடத்திலேயே பதிவு செய்யப்பட வேண்டும்.p
  6. பிறப்புக்கான பதிவென்றால் குழந்தையின் பெயர் அவசியம் இருக்க வேண்டும். இந்த தகவல் இலவசமாக பதிவு செய்யப்பட சட்டம் ஒரு வருடம் அவகாசம் அளிக்கிறது. பிறப்பு பதிவு செய்யப்பட ஒரு வருட காலத்துக்கு பிறகு குழந்தையின் பெயர் பதிவு செய்யப்பட வேண்டுமானால் ஐந்து ரூபாய் கட்டணம் வசூலிக்கப்படும். ஆனால் பிறப்பு பதிவு செய்யப்ப்பட்ட நாளிலிருந்து பதினைந்து ஆண்டுகளுக்கு பிறகு குழந்தையின் பெயர் பதிவு செய்யப்பட இயலாது.
  7. 2000-ஆம் ஆண்டு ஜனவரி மாதம் ஒன்றாம் நாளுக்கு முன்பு பெயர் இல்லாமல் பதிவு செய்யப்ப்பட்ட பிறப்புக்கான பெயர் பதிவு செய்து கொள்ள சட்டம் இரண்டாயிரத்து பதினாலு டிசம்பர் மாதம் முப்பத்தி ஒன்றாவது தேதி வரை அனுமதி அளித்துள்ளது. அவ்வாறே ௨000-ஆம் ஆண்டு ஜனவரி மாதம் ஒன்றாம் தேதிக்கு பிறகு பெயர் இல்லாமல் பதிவு செய்யப்படும் பிறப்புக்கு பெயர் பதிவு செய்யப்பட பதினைந்து வருடங்கள் அவகாசம் உள்ளது.
  8. ஒருமுறை பதிவு செய்யப்பட்ட பெயர் திரும்பவும் மாற்ற இயலாது.
  9. பிறப்பு அல்லது இறப்பு நடைபெறும் மருத்துவ மனையின் பொறுப்புள்ள மருத்துவ அதிகாரி தகவல் தெரிவிக்க கடமைப்பட்டுள்ளார். அதுபோல வீட்டில் நடைபெறும் பிறப்பு அல்லது இறப்பு பற்றிய தகவல் தெரிவிக்க வீட்டின் குடும்ப தலைவர் அல்லது நெருங்கிய உறவினர் கடமைப்பட்டவர் ஆவார்.

No comments: